132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதை சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில், வெளிநாட்டுப் பயணிகள் யாரும் இல்லை என, பயணிகளின் தகவல் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளதாக, சீன ஊடகக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் உறுதியான தகவல் பெறப்படும் என, ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சீன ஊடகக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் குழுவினர் நிகழ்விடத்துக்குச் சென்றடைந்திருக்கின்றனர்.
வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.


Post a Comment
Post a Comment