மாணவர் வரவுஇடாப்பில் டிபெக்ஸ் பயன்படுத்த கூடாது !






( வி.ரி.சகாதேவராஜா)

மாணவர்களின் வரவுப் பதிவேடு என்பது நிதியோடு சம்பந்தப்பட்ட ஒரு ஆவணம் .எனவே அதில் ரிப்பெக்ஸ் அழிகருவி பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளுக்காக பணிப்பாளர் மேஜர் நசிமுதின் தெரிவித்தார்.

 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நிரல் அமைச்சினதும் வலயக்கல்விப் பணிமனையின் கல்வி சார் உத்தியோகத்தர்களினதும் வெளிவாரி மதிப்பீட்டை  பூர்த்தி செய்த பின்னர் இடம் பெற்ற ஆசிரியர்  கூட்டத்தில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 கூட்டம் கல்லூரி அதிபர் நாசிர்அலி தலைமையில் நடைபெற்றது. சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர்  தலைமையிலான கல்வி சார் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்.

 இலங்கையில் 943 முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன. அதில் 53 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக இருக்கின்றன .புகழ் பூத்த பாடசாலைகளிலே சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியும் ஒன்று. இது பத்து ஏக்கர் பரப்பில் பிரதான வீதியருகே 3356 மாணவர்களுடனும் 148 ஆசிரியர்களுடன் சிறந்த ஆளணி வளத்துடன் இயங்கி வருகின்றது.

 எனக்கு யாரையும் குற்றம் கூறி அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால் இங்கு வருகின்ற ஆசிரியர்கள் இதயசுத்தியோடு இறைவனுக்கு பயந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது கடமையாகும். கொரோனா மற்றும் ஈஸ்டர் தாக்குதல் காலத்திலே மாணவர்கள் ஜூம் மூலம் கற்றார்கள். இப்பொழுது காலம் கனிந்திருக்கின்றது. எனவே வகுப்பறையிலே கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுகளை தொடர வேண்டும். இருந்த பொழுதும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் பணியாற்ற வேண்டி இருக்கின்றது. அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா என்ற ஒரு கேள்வியும் கேட்கப்படுகிறது.

 எனவே நாங்கள் இறைவனுக்கு பயந்து இந்த ஆசிரிய சேவையை மேற்கொள்ள வேண்டும் பாடசாலை மேலும் பல வழிகளிலே அபிவிருத்தியடைய வேண்டும் .அடுத்த முறை வரும்பொழுது மிகவும் திருப்தி அளிக்க கூடியதாக இந்த பாடசாலை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றார்.
கிழக்கு மாகாண உதவி கல்வி பணிப்பாளர் ரி.சிறிதரனும் உரையாற்றினார்.