( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் நான்கு வருட கால ஜீவ சேவையை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புவதை முன்னிட்டு இன்று (15) சனிக்கிழமை பிரியாவிடை வைபவம் நடைபெறவுள்ளது.
அவரது அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி வழியனுப்பும் பிரியாவிடை வைபவம் இன்று காலை 10 மணியளவில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் நடைபெற இருக்கின்றது.
இ.கி.மிஷன் ஆர்வலர்கள், சிவானந்தா பழைய மாணவர்கள், இல்ல பழைய மாணவர்கள் இணைந்து அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள்..
நிகழ்வில் இ.கி.மிஷனை இலங்கையில் வியாபித்த உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவில் இருந்து செல்லும் மிஷன் பழைய மாணவர்கள் அபிமானிகள் மற்றும் இகிமிஷன் சார்ந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேச பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல புதிய பொது முகாமையாளராக இதுவரை உதவிப் பொது முகாமையாளராக சேவையாற்றிவந்த ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மிஷன் வேலூர் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .
அவர் நேற்று 14 ஆம் தேதி சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் அவர்களிடம் இருந்து இல்ல பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.
அவ் வைபவம் நேற்று இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது.
பெரு வரவேற்பு.
இல்லத்தின் புதிய பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களையும் ,உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தஜி ஆகியோரை வரவேற்கும் வைபவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கல்லடியில் நடைபெற்றது. நிகழ்வில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜும் கலந்து சிறப்பித்தார்.
சிவானந்தா தேசிய கல்லூரி ,விவேகானந்த மகளிர் கல்லூரி ,மிசன் பழைய மாணவர்கள், மற்றும் இகிமி நலன்விரும்பிகள், அபிமானிகள் சுவாமிக்கான வரவேற்பை வழங்கினார்கள்.
இதேவேளை, கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைமையகத்தில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் இந்தியா திரும்பும் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜுக்கு பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.
அதேவேளை ,இந்தியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வந்துள்ள சுவாமி சுரர்ச்சிதானந்தஜி அவர்கள் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி முகாமையாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


Post a Comment
Post a Comment