பெங்களூர், மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கை 16.2 ஓவர்களில் முடித்து, விராட் கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து தனது இன்னிங்ஸை முடித்தது. அதைத் தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பெங்களூரு அணி சாவகாசமாக வெற்றியை ருசித்துள்ளது.
ஆர்சிபி சொந்த ஊரில் விளையாடிய ஐபிஎல் முதல் போட்டியில் ஆட்டம் முழுக்க ஆதிக்கம் செலுத்தி எடுத்துள்ள வெற்றி இது. அதுவும் சாதாரண வெற்றியல்ல, பிரமாண்டமான வெற்றி.
‘சேஸ் மாஸ்டர்’ விராட் கோலியும் டுப்ளெஸ்ஸியும் மட்டுமே இணைந்து ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்களின் திறமை வெளிப்பட்டது என்றால், பெங்களூருவில் மூத்த வீரர்களின் அனுபவம் அபாரமாக வெளிப்பட்டது.
விராட் கோலி ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்குவார், பிறகு அதிரடியாக வெளுப்பார். டுப்ளெஸ்ஸி ஆரம்பத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருடைய அனுபவமும் ஆர்சிபியின் முதல் போட்டியை ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டியாக மாற்றியது.
மும்பை அணி பவர் பிளேவில் முழுமையாக ஆடவில்லை. வழக்கம்போல மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளனர். தொடர்ச்சியாக 11வது முறையாக முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஆனால், திலக் வர்மா இந்தியாவுக்கு கூடிய விரைவில் ஆடிவிடுவார் என்ற அளவிலான திறமையை வெளிப்படுத்தினார். அவர் தொடங்கிய முதல் பந்து முதல் இறுதிப் பந்து வரை சிறப்பாக ஆடினார்.


Post a Comment
Post a Comment