பாவனைக்கு உதவாத புழுக்கள் நிறைந்த 1500 கிலோ கிராம் மீன் அழிப்பு!



 


திருகோணமலை இறால்குழி கிராமத்தில் மனித பாவனைக்கு உதவாத புழுக்கள் நிறைந்த 1500 கிலோ கிராம் மீனை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளனர். 


இறால்குழி கிராமத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் அடங்கிய குழுவினர் (05) மேற்கொண்ட சோதனையின் போது மாசடைந்த இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


கருவாடு தயாரிப்பதற்காக இந்த மீன்கள் வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு தரமற்ற மீன்களை சேமித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து  குறித்த மீன்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன்  சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் அபாயத்தை கருத்திற்கொண்டு கைப்பற்றப்பட்ட மீன்களை உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நியூஸ் டே செய்தியாளர் கூறினார். 


உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், சுகாதார நிலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.