தயிர் உற்பத்தி நிலையங்கள் திடீர் பரிசோதனை





 நூருல் ஹுதா உமர்


கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சாய்ந்தமருது பிரதேசத்தில் நோன்பு காலங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் தயிர் வகைகள் தொடர்பாக விசேட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் செயல்பட்டு வரும் தயிர் உற்பத்தி நிறுவனங்கள் நேரில் சென்று பரிசோதிக்கப்பட்டன.

அவற்றின் உற்பத்தி சூழல், சுகாதார நிலைமைகள், உற்பத்தி செயல்முறைகள் மற்றும் தொழிலாளர்களின் வைத்திய சுகாதார சான்றிதழ்கள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்கள் சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.

மேலும், உற்பத்தி செய்யப்படும் தயிர் பொருட்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி, உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் இந்நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வைத்திய சுகாதார சான்றிதழ்கள் இன்றி பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மூலம் தேவையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.