2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடு முழுவதும் இன்று (17) ஆரம்பமாகின்றன.
இம்முறை பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் மற்றும் பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வருமாறு:
பரீட்சை விபரங்கள்
பரீட்சை நிலையங்கள்: 3,545
மொத்த பரீட்சார்த்திகள்: 451,463
நேரம்: காலை அமர்வு 8.30 மணிக்கும், மதிய அமர்வு 1.30 மணிக்கும் ஆரம்பமாகும்.
பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே நிலையங்களுக்கு வருகை தர வேண்டும்.
பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி, கடந்த வருடங்களை விட இம்முறை 5, 6, 7 மற்றும் 8 ஆம் நாட்களில் பாட ஒழுங்கமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான அட்டவணைகளை நம்பாமல், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் உள்ள அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான முக்கிய விதிமுறைகள்
தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் கட்டாயம். (தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய தற்காலிக அட்டை அனுமதிக்கப்படும்).
கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் மற்றும் எவ்விதமான குறிப்புகளும் கொண்டு வரக்கூடாது.
விடைத்தாளில் 'திப்பெக்ஸ்' (Tipp-Ex) பயன்படுத்தக் கூடாது. தவறு நேர்ந்தால் ஒரு கோட்டினால் குறுக்காக வெட்டிவிட்டு எழுத வேண்டும்.
முகம் தெளிவாகத் தெரியும் வகையில் (அடையாளம் காணக்கூடியவாறு) பரீட்சை நிலையத்திற்கு வர வேண்டும்.
- வினாத்தாளைப் பெற்றவுடன் அறிவுறுத்தல்களைத் தெளிவாக வாசித்து, அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்.
- பரீட்சை சுட்டெண்ணைத் (Index Number) துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.
- கையெழுத்துத் தெளிவாக இருப்பதுடன், விடைத்தாள்களைச் சரியாக நூலால் கட்டி ஒப்படைக்க வேண்டும்.
- ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால், பரீட்சைப் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் அனைவரும் பதற்றமின்றி, நேர முகாமைத்துவத்துடன் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சை திணைக்களம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது


Post a Comment
Post a Comment