அம்பாறை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட அபிவிருத்தி கருத்தரங்கு



 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று (02) சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அறநெறிக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் திருமதி அனந்தா அம்பிகைபாகன் கலந்து கொண்டு அறநெறிப்பாடசாலைகளின் நோக்கம், எதிர்கால நடவடிக்கைகள், ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். மேலும் ஆக்கத்திறன் போட்டிகள், குருபூசை நிகழ்வுகள் மற்றும் புதிய மாணவர்களை அறநெறிக் கல்வியில் இணைக்கும் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

சிறப்பு அதிதியாக காரைதீவு பிரதேச செயலக உதவி பணிப்பாளர் திரு பே. பிரணவரூபன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம் தலைவர் மற்றும் திருக்கோவில் பிரதேச வலயக்கல்வி பிரதிகல்விப்பணிப்பாளர் திரு சோ. ஸுரநுதன், காரைதீவு இந்துசமய விருத்திச்சங்க தலைவர் திரு எஸ். சிவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கி. குணநாயகம் மற்றும் உறுப்பினர் திரு எஸ். சிவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறநெறிப்பாடசாலை புதிய பாடத்திட்டம் தொடர்பான விளக்க உரையை அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி நிகழ்த்தினார். மேலும் அறநெறிப்பாடசாலைகளை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய கற்பித்தல் முறைகள், விளையாட்டுகள் மற்றும் கற்பித்தல் உத்திகள் தொடர்பாக சைவப்பண்டிதர் வளவாளர் திரு யோ. கஜேந்திரா விளக்கமளித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளச்சேனை, நிந்தவூர், காரைதீவு, லாகுகல, சம்மாந்துறை, கல்முனை வடக்கு மற்றும் நாவிதன்வெளி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 348 ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள், பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, பஞ்சாங்க நாட்குறிப்பு, பண்ணிசைக்கான சல்லாரி மற்றும் கதாபிரசங்க நிகழ்வுக்கான சப்பிலாக்கட்டை போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் ஏற்பாடுகளை திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி மேற்கொண்டார்.

தனது தலைமையுரையில் திணைக்களப் பணிப்பாளர், இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கவிழுமியக் கல்வி மிக அவசியமானது என்றும், அனைவரின் ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தில் ஒழுக்கம் மற்றும் சாந்தம் மிக்க தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.