வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் உல்லாசத்துறையினை அபிவிருத்தி செய்ய பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம். அதன் ஒரு கட்டமாக இதுபோன்ற ஆரோக்கிய உணவு விற்பனை நிலையங்களை திறந்து வருகின்றோம் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமுகத்துவாரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆரோக்கிய உணவு விற்பனை நிலையத்தை நேற்று மாலை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் பெயர் பலகையினை பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உள்ளிட்ட அதிதிகள் இணைந்து திறந்து வைத்து விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை பார்வையிட்டனர்.
நீண்ட காலமாக மக்களது தேவைப்பாடுகளில் ஒன்றான மிகவும் முக்கியத்துவமான ஆரோக்கிய உணவு விற்பனை நிலையத்தினை அமைத்துக்கொடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் அரசுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment