அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணாவில் சாதனை மாணவர்கள் 73 பேர் கௌரவிப்பு.



 


(வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா  தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை (06) காலை 
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர். டேவிட் அமிர்தலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில், அனைத்து துறைகளிலிருந்தும்  பல்கலைக்கழகத்திற்குதெரிவுசெய்யப்பட்ட 73  க்கு மேற்பட்ட மாணவர்கள்  கௌரவிக்கப்பட்டார்கள்.

 விசேடமாக 05 மாணவர்கள் மருத்துவப் பீடத்திற்கு தெரிவாகியிருந்தனர். 

மேலும், மருத்துவத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ரமேஷ் தேட்ஷித் இப் பாடசாலையை  சேர்ந்தவர். 

அத்துடன் வர்த்தகப் பிரிவில் மாவட்ட நிலைகளில் 3 மற்றும் 8ஆம் இடங்களையும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயம் மாகாண அளவில் 3ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.


இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர். ஏ. நசீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.


அத்துடன் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க (SDC) உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.