பாரினில் பிறக்கும் #பராபவ புத்தாண்டு புதுமை படைக்கட்டும்!



 பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா?


தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு.

அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதைக்கிறது. 

அந்த வகையில், விசுவாவசு ஆண்டைத் தொடர்ந்து, 60 ஆண்டு காலச் சுழற்சியின் 40வது ஆண்டான பராபவ ஆண்டு, 2026 ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. 

இந்த ஆண்டு வெறும் கால மாற்றத்தை மட்டுமல்லாது, மனம், சமூகம் மற்றும் உலகளாவிய அளவிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாகப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

பிறப்பு நேரத்தின் சிறப்பு

சித்திரை 1ஆம் தேதி காலை 8.46 மணிக்கு, சதயம் நட்சத்திரம் மற்றும் ரிஷப லக்னத்தில் பராபவ ஆண்டு பிறக்கிறது. இந்த நேரத்தில் சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிப்பதே தமிழ் புத்தாண்டின் துவக்கமாகக் கருதப்படுகிறது. இந்த கிரகநிலை, ஆண்டின் பலன்களுக்கு அடிப்படையாக அமையும் என நம்பப்படுகிறது.

பராபவ ஆண்டின் வெண்பா :

இடைக்காடர் சித்தர் ஆண்டுகளுக்கு மொழிந்த வெண்பாக்களில், பராபவ ஆண்டுக்கான வெண்பா இது

"மிக்க பராபவத்தின் மேதினியிற்
பின் மழையாம்
தக்க பசைக்கடழைக்குமே இது பலிக்காது
நான்கு வகைப்பல்லுயிர்க்கும் துன்பம்
கல்லிக்காதனவே கருது"

பொருள் :
பருவமழை தாமதமாக வரலாம்
பருவம் தவறிய மழை, வெயில் கலந்த காலநிலை
கால்நடைகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது
பால் உற்பத்தி அதிகரிக்கும்
விவசாயம் சார்ந்த துறைகள் முன்னேறும்
ஆனால்…
மக்கள் வாழ்வாதாரத்தில் சில சவால்கள்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
உலக சந்தை மாற்றங்கள்
உலகளாவிய சுழற்சிகள் ஏற்படும்.


பராபவ ஆண்டில் வரப்போகும் மாற்றங்களும், செய்ய வேண்டியவையும்:

மத்திய கிழக்கில் நடைபெறும் பதற்றங்கள் குறையலாம். ஆனால் முற்றிலும் மறையாது. புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகரிக்கும். இணைய வழி மோசடிகள், பண ஏமாற்றங்கள் அதிகரிக்கும். அரசுத்துறைகளில் நவீன மாற்றங்கள் தோன்றும். புதிய நோய்கள், வைரஸ் தாக்குதல்கள் ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும் அபாயம், மனஅழுத்தம், குழப்பம் ஆகியவை ஏற்படும். அதனால் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

இந்த ஆண்டின் மிகப்பெரிய வரம், குரு பகவான் ராஜாவாக இருப்பது. இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோயில் வழிபாடு உயரும். தியானம், தர்மம், யோகம் போன்றவை வளர்ச்சி பெறும்.

 
மனித மன மாற்றம்

பராபவ ஆண்டு, மனித மனத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக பார்க்கப்படுகிறது.
 வஞ்சக எண்ணங்கள் குறைந்து, நல்லதை நோக்கிச் செல்லும் மனப்பாங்கு உருவாகும்.
 உண்மையான உறவுகளின் மதிப்பு அதிகரிக்கும். அதேவேளை, அரசியல் நிலைத்தன்மையில் மாற்றங்கள் மற்றும் அமைதி குறையும் சூழல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

முடிவுரை

மொத்தத்தில், பராபவ சித்திரைப் புத்தாண்டு சவால்களும் வாய்ப்புகளும் கலந்த ஆண்டாக அமைகிறது. முன்னெச்சரிக்கை, சிக்கன வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கை ஆகியவற்றை கடைபிடித்தால் இந்த ஆண்டை வெற்றிகரமாக சமாளிக்க முடியும். புதிய எண்ணங்களுடனும் நல்ல மனப்பாங்குடனும் இந்த புத்தாண்டை வரவேற்போம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு