புனித யாத்திரையாக கதிர்காம பாத யாத்திரையினை பிரகடனப்படுத்தல்



 


வி.சுகிர்தகுமார்      


புனித யாத்திரையாக கதிர்காம பாத யாத்திரையினை பிரகடனப்படுத்தல்                                                
 இலங்கையில் உள்ள இந்து மக்களின் புனித யாத்திரைகளில் மிகமுக்கியமான கதிர்காம யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடணப்படுத்தி வர்த்தமானியில் வெளியிட வேண்டி அரசிடம் கோரிக்கை விடுப்பது  தொடர்பிலான  ஆலோசனைக் கூட்டம் இன்று (11) காரைதீவில் உள்ள விபுலானந்தர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒருங்கிணைப்பில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் காரைதீவு உதவிப்பிரதேச செயலாளர் பிரணவரூபன் திருக்கோவில் உதவி;ப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அம்பாரை மாவட்ட அனைத்து இந்து ஆலயங்கள் இந்து சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் தொடர்பில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் விளக்கினார்.
கதிர்காம யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடணப்படுத்தி வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவூட்டினார்.
இதன் பின்னராக ஆலயங்களின் தலைவர்கள் சமூக சமய அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் தங்களது ஆக்கபூர்வமான ஆதரவு தெரிவிக்கும் கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று வர்த்தமானயில் புனித யாத்திரையாக பிரகடணப்படுத்த ஆக்க பூர்வமான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்கும் வகையிலான மகஜர்களை கையளித்தனர்.
கதிர்காம கந்தனின் அருள் வேண்டி இலங்கையில் பல பாகங்களிலும் வாழும் இந்து மக்கள் இதனை வருடம்தோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்து மக்கள் மிக பயபக்தியுடன் நேர்த்தி வைத்து இந்த யாத்திரையினை மேற்கொண்டுவருவது வழமை. வனாந்தரங்களின் ஊடாக முருகனே துணை என வேண்டி இந்த பாதயாத்திரையினை பக்தர்கள் மேற்கொள்வதுடன் கைமேல் பலம் கிடைத்தும் முருகப்பெருமானுக்கு நன்றி சொல்கின்ற யாத்திரையாகவும் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்ளும் இப்பெரும் புனித யாத்திரைக்கு இதுவரையில் தேசிய ரீதியிலான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது இந்து மக்களின் பெரும் குறையாகவும் கவலையாகவும் இருந்து வருகின்றது.
ஆகவே இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு யாத்திரையினை வர்த்தமானி மூலம் புனித யாத்திரையாக பிரகடணம் செய்து பக்தர்களின் குறை தீர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என மகஜர்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
தொடர்ந்து சங்கமன்கண்டி ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற சமூக அமைப்புக்களுக்கான நினைவுச்சின்னங்களையும் மேலதிக அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்