நியூசிலாந்து ரக்பி அணியிடம் போராடித் தோற்றது இலங்கை டஸ்கர்ஸ்!



 


கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச ரக்பி மைதானத்தில் இன்று (25) மாலை நடைபெற்ற நியூசிலாந்து 85 கிலோவிற்கும் குறைந்த எடையுடைய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை டஸ்கர்ஸ் அணி 27-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தது.


பலமிக்க நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இரண்டு ட்ரை (Try)களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக ஆகாஷ் மதுஷங்க மற்றும் ஜனிந்து டில்ஷான் ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் பெற்றனர். அதேவேளை தேனுக நாணயக்கார இரண்டு பெனால்டி வாய்ப்புகளைப் புள்ளிகளாக மாற்றினார்.


இலங்கை அணியின் திடீர் தாக்குதல் மற்றும் பலமான தடுப்பாட்டத்தை எதிர்கொள்ள நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும், இறுதியில் அந்த அணி மூன்று ட்ரைகளை விளாசியது. இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் இரண்டாவது போட்டி மே மாதம் 3 ஆம் திகதி கண்டி நித்தவெல ரக்பி மைதானத்தில் நடைபெறவுள்ளது.