நேருபுர மக்கள் கிளர்ந்தெழுந்தனர்




 (  வி.ரி.சகாதேவராஜா)

அனுமதியின்றி அமைக்கப்பட்ட கல்குவாரி தொடர்பில் 
அப்பகுதி பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இச் சம்பவம் நேற்று  வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட 
திருக்கோவில் பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியின்றி கல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு நேற்று முன்தினம் அப் பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிலைமையினை சீராக்கும் வகையில் அவ்விடத்திற்கு விரைந்து விஜயம் செய்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  திருக்கோவில் பிரதேச சபையின்  தவிசாளர் சு. சசிகுமார்  திருக்கோயில் பிரதேச செயலாளர்  த. கஜேந்திரன்  மூவரும் இணைந்து, குறித்த கல்குவாரியானது அவ்விடத்திலிருந்து அகற்றப்படும் எனவும் இது சட்டத்துக்கு எதிரானது என்றும் மக்களின் கோரிக்கையை  கருத்தில் கொண்டு தெரிவித்தனர்.

 திருக்கோயில் பிரதேச செயலாளர் இது விடயம் தொடர்பாக தெரிவிக்கையில் குறித்த இடமானது குளத்திற்கு சொந்தமான இடம் எனவும் அது ஒரு அரச காணி எனவும் அவற்றில் கட்டடம் அமைக்க முடியாது எனவும் மக்களுக்கு தெரிவித்தார். மேலும்பாராளுமன்ற உறுப்பினர்  குறித்த கட்டடம் சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என அம்பாரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு குறித்த கற்குவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது 

மேலும் அவ்விடமானது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் குறித்த கட்டடமானது அகற்றப்படும் எனவும் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.