40 நாடுகளுக்கான இலவச சுற்றுலா வீசா திட்டம் இன்று




 இலங்கைக்கு சுற்றுலா நோக்கில் வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீசா வழங்கும் புதிய நடைமுறை இன்று (25) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.


அமைச்சரவை அனுமதி மற்றும் பாராளுமன்ற ஒப்புதலுக்கு அமைவாக அமுலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் கீழ், தகுதியுடைய வெளிநாட்டு பிரஜைகள் 30 நாட்கள் செல்லுபடியாகும், இரட்டை நுழைவு அனுமதியுடன் கூடிய இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இந்த திட்டம் அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 40 நாடுகளின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மாலைத்தீவுகள், சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டினரும் தொடர்ந்தும் கட்டணமின்றி ETA பெறவுள்ளனர்.


ஆரம்ப 30 நாள் காலத்தைத் தாண்டி இலங்கையில் தங்க விரும்புவோர், உரிய கட்டணத்தைச் செலுத்தி வீசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.