அலிக்கம்பை கிராமத்தில் இவ்வருடம் 43 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு



 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 இலட்சம் பெறுமதியான 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (31) நடைபெற்றது.
கடந்த காலத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறி வீடுகள் இன்றி சிறிய கொட்டகைகளினுள் வாழ்ந்து வரும் அலிக்கம்பை கிராமத்தில் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு இவ்வருடம் 43 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அரசினால் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அலிக்கம்பை தேவகிராமத்தின் புனித சபேரியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆன்ரோய் உதவிப்பங்குத்தந்தை சுஜீவன் ஆகியோரின் விசேட ஆராதனைகளுடன் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ கிராம உத்தியோகத்தர் நிதர்சன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் அக்கிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.