முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
"அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது"
ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகமான கதம் அல்-அன்பியா அமெரிக்கா திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து புறப்பட்ட ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே சென்ற மற்றொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இலக்கு வைத்துள்ளன.
கடல் பகுதியில் மட்டுமன்றி, ஈரானின் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
"இது தற்காப்புத் தாக்குதல் மட்டுமே"
ஈரானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க இராணுவம், ஈரானின் தூண்டுதலற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாம் செயல்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹோர்முஸ் நீரிணையை மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் கடக்க முயன்றபோது, ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய ரகப் படகுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஈரானிய இராணுவத் தளங்கள் மீது துல்லியமான பதிலடித் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டுள்ளன.
உலகளாவிய மசகு எண்ணெய் போக்குவரத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையேற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.


Post a Comment
Post a Comment