தமிழ்த்தினப் போட்டிக்குச் சென்ற மூன்று மாணவிகள் விபத்தில் காயம்.!



போரதீவுப்பற்றில் தமிழ்த்தினப் போட்டிக்குச் சென்ற மூன்று மாணவிகள் விபத்தில்  காயம்.!


​தமிழ்த்தினப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற பாடசாலை மாணவிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர்.


இன்று (07.05.2026) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள், கோவில்போரதீவு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.


வெல்லாவெளி - பொறுகாமம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியின் முன் டயர் திடீரென வெடித்துள்ளது. 


இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தின் காரணமாக முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


விபத்தின் போது வாகனத்திலிருந்த நான்கு மாணவிகளில் மூவர் காயமடைந்த நிலையில், உடனடியாகக் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


​மாணவிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் இது குறித்துத் தெரிவிக்கையில்.


​சிகிச்சை பெற்ற மாணவிகளில் இருவர், தங்களது திறமையை வெளிப்படுத்தும் ஆர்வத்துடன் சிகிச்சை முடிந்து உடனடியாகத் தமிழ்த்தினப் போட்டிக்குச் சமூகமளித்துள்ளனர்.


​ஒரு மாணவி மட்டும் மேலதிக சிகிச்சைக்காகத் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.