விஜய் திரை வழியே அரசியலிலும் மக்கள் மனதை வென்ற கதை



 


தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஆட்சியில் இருந்த மற்ற பெரிய கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தயக்கம் மிகுந்த நாயகனாக 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், இப்போது அரசியலில் தனது முதல் தேர்தலிலேயே வென்று காட்டியுள்ளார். அவரது தனி வாழ்வும் திரைவாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், அரசியலில் விஜய் ஒரு புதிய பாணியை கையாளுகிறார்.

விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன?

விஜயை நேரில் சந்திக்கும் யாரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அம்சம் உண்டு. அதாவது, திரையில் துறுதுறுப்பாகத் தென்படும் விஜய், நேரில் பார்க்கும்போது முற்றிலும் மாறானவராக நடந்துகொள்வார். திரையில் பார்த்த ஒரு கலகலப்பான மனிதரை எதிர்பார்த்துச் சென்றால், பேசவே தயங்கக்கூடிய, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் ஒரு நபராக இருப்பார் விஜய்.

"பத்து வயதிலேயே தங்கையை இழந்துவிட்டு, பெற்றோரின் ஒரே குழந்தையாக வளர்ந்ததும் தன் வயதுக்கேற்ற ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் இல்லாததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்," என ஒரு முறை தெரிவித்தார் விஜய்.

அப்படிப்பட்ட ஒரு நபர், தனது புதிய கட்சியின் அரசியல் மேடைகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முழங்குகிறார். புதியவர்களிடம் பேசத் தயங்கும் இளைஞராகத் துவங்கி, ஒரு கட்சியின் தலைவராகப் பரிணாமம் எடுத்த விஜயின் பயணம் சாதாரணமானதல்ல.

எட்டாம் வகுப்பில் தொடங்கிய நடிப்பு

விஜய் சிறுவனாக இருக்கும்போதே நிகழ்ந்த தங்கை வித்யாவின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. அவரே சொன்னபடி, மேலும் அமைதியானவராக மாறினார் விஜய்.

எஸ்.ஏ. சந்திரசேகர் படங்களை இயக்க ஆரம்பித்தபோது விஜய்க்கு வேடிக்கை பார்க்கக் கூடிய வயது வந்திருந்தது. அந்த சமயத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும்பாலும் விஜயகாந்தை வைத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். முதல் படத்தில் நடிக்கும்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தார் விஜய்.

"10ஆம் வகுப்பில் நான் சராசரிக்கும் சற்று மேலான மாணவனாகத்தான் இருந்தேன். அதன் பிறகு படிப்பில் ஆர்வம் குறைய சினிமா ஆசை வந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் நிறைய சினிமா பார்த்தேன். சிறிது காலம் கழித்து சினிமாவில் வரவேண்டும், நடிக்க வேண்டும் என்று சொல்ல வீட்டில் கடுமையான எதிர்ப்பு. எங்களுக்காக ஒரு டிகிரி படி, பிறகு நானே உனக்காக ஒரு படத்தைத் தயாரிக்கிறேன் என்றார் அப்பா."

"அதன் பிறகு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்ந்தேன். ஒரு வருடம்தான் படித்தேன். அப்போது அப்பா நாளைய தீர்ப்பு படத்தைத் தயாரித்தார். அதில் என்னை ஹீரோவாக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. 6- 7 மாத இடைவெளி. திரும்பவும் கல்லூரிக்குப் போனேன்," என தன் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையைப் பற்றி 2009-இல் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் சுருக்கமாகத் தெரிவித்தார் விஜய்.

X/TVK

தேர்தல் பிரசாரத்தில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவே விஜயின் பிரதான குறியாக இருந்தது. திமுக மீதான விமர்சனங்களை தனது ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் அவர் முன்வைத்தார். இந்த தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் நடக்கும் தேர்தல், ஸ்டாலின் அங்கிளுக்கும் விஜய் அண்ணாவுக்கும் இடையிலான தேர்தல் என்றே அவர் தனது பேச்சுகளில் குறிப்பிட்டு வந்தார்.

இதனால் எரிச்சலடைந்த பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக விஜயை கடுமையாக சாடிய போதிலும், விஜய் தனது பிரசார பாணியை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஜனநாயகன் பிரச்னையில் கூட மத்தியில் ஆளும் பாஜகவை நேரடியாக சீண்டாத அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட சில தருணங்களில் மட்டுமே அக்கட்சி விமர்சனங்களை முன்வைத்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்புகளில் பலவும் திமுக அல்லது அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று கூறின. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு மட்டுமே திமுக, அதிமுகவை விஞ்சி விஜயின் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தது. அந்த கணிப்பு உண்மையாகக் கூடும் என்பதே தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரமாக உள்ளது.

நண்பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக, அதிமுகவை விஞ்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. முதன் முறையாக தேர்தல் களம் கண்டுள்ள தவெக அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெறுமா என்று அக்கட்சித் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து தேர்தல் முடிவை பின்தொடர்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு