அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, ஈரானில் உள்ள பல முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் அதிரடி நள்ளிரவுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நேரப்படி, நேற்று நள்ளிரவுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ‘X’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில்:
"ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி அறிவிப்பு ஒன்றை ஈரானின் இராணுவ கட்டளையகம் இன்று (11) வெளியிட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ உடனடியாக மூடுவதாக ஈரான் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வணிகக் கப்பல்கள், எண்ணெய் விநியோகக் கப்பல்கள் உட்பட எந்தவொரு கப்பலும் இந்த நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை.
இந்தத் தடையை மீறி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு அல்லது நேரடித் தாக்குதல் நடத்தப்படும்.
அமெரிக்காவின் நள்ளிரவுத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக உலகையே அச்சுறுத்தும் வகையில் ஈரான் கடல் எல்லையை மூடியுள்ளதும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.


Post a Comment
Post a Comment