திடீர் சோதனை



 


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.



குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19) முதல் தொடராக காலை முதல் மாலை வரை  மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில்   கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் இந்த நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ்  போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.டி.ஆர் விஜயவர்த்தன உட்பட    பொலிஸ்  குற்றப் புலனாய்வு பிரிவு  ஊழல் ஒழிப்பு பிரிவு சுற்றாடல் பிரிவு பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் போக்குவரத்து பிரிவு அக்கரைப்பற்று உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

இது தவிர சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகத்தின் வீதி ஒழுங்கு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும்  சிலரின் சட்டவிரோத நடவடிக்கையினால் மேற்படி தொடர் விசேட திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இதன் போது மதுபானம் அருந்தி மோட்டார் சைக்கிள் செலுத்திய  ஒருவர் உட்பட தலைக்கவசம் அணியாமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் மோட்டார் சைக்கிளில் மூவர் உள்ளிட்ட 3hன்கு பேர் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல்  உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மோட்டார் சைக்கிள்கள்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு வாகன ஓட்டுநர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம்  இப்பகுதியில் தொடர்ச்சியாகப் இடம்பெறும் பல விபத்துகளையும்  உயிரிழப்புகளும் குறைப்பதுடன்   இன்றைய விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தெரிவித்தார்