நூருல் ஹுதா உமர்
காத்திரமான கலந்துரையாடல்களின் பின்னரே பொதுவெளியில் மருதமுனை நகர சபை உருவாக்கம் தொடர்பான நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுவது ஆரோக்கியமானதோடு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தவிர்க்க உதவும். மருதமுனையின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, உணர்ச்சிவசப்படாத அணுகுமுறையுடனும், அனைவரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஜனநாயக நடைமுறையுடனும் இந்த விடயம் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மருதமுனைக்கு தனியான நகர சபை அமைப்பது தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நேற்றைய தினம் இது தொடர்பாக ஒரு ஊடக சந்திப்பு இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருதமுனைக்கான நகர சபை உருவாக்கம் என்பது மக்களின் நீண்டகால அபிலாஷைகளுடன் தொடர்புடைய முக்கியமான விடயமாகும். எனினும், இவ்வாறான முக்கியமான ஒரு விவகாரம் தொடர்பில் பொதுவெளியில் உடனுக்குடன் கருத்துக்களை முன்வைப்பதை விடுத்து, முதலில் உள்ளக ரீதியிலான ஆழமான மற்றும் பொறுப்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும்.
குறிப்பாக, 1990 ஆம் ஆண்டு முதல் உள்ளூராட்சி அரசியலில் செயற்பட்டு வரும் சட்டத்தரணி அன்சார் மௌலானா, முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் போன்ற மூத்த அரசியல் அனுபவஸ்தர்களுடனும், கடந்த காலங்களில் மருதமுனையிலிருந்து கல்முனை மாநகர சபைக்கு உறுப்பினர்களாக சென்றவர்களுடனும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், புதிய உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பது தொடர்பில் நிலத் தொடர்பு, நிர்வாக எல்லைகள், சட்டரீதியான நிபந்தனைகள், மக்கள்தொகை அடிப்படைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன. மருதமுனைக்கு வடக்கே நீலாவணை போன்ற தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், சகோதர கிராமங்களுடனான புரிந்துணர்வும் கலந்துரையாடல்களும் இவ்விடயத்தில் தவிர்க்க முடியாத அம்சங்களாகும்.
எனவே, பள்ளிவாசல் தலைவர்கள் அல்லது குறிப்பிட்ட சில தரப்பினரின் மட்டுப்படுத்தப்பட்ட கலந்துரையாடல்களைக் கடந்து, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றும் வகையில் பிரதேச மட்டத்தில் விரிவான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி என்.ஏ.எம். அஸாம், சமட் ஹமீட் போன்றோர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment