நினைவு தினம்




 (  வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த  69 அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு ஒன்று நேற்று  (12) வெள்ளிக்கிழமை மாலை புதிய வளத்தாப்பிட்டி  நாவலர் சனசமூக நிலைய மண்டபத்தில் முதன் முறையாக உணர்வு பூர்வமாக  நடைபெற்றது.

36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக புதிய வளத்தாப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் அதன் தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான வெள்ளி ஜெயச்சந்திரனின் தலைமையில்  நடைபெற்ற இந்த உறவுகளை நினைவுகூரும் இந்நிகழ்வில், குறிப்பாக 1990.06.12 அன்று கொல்லப்பட்ட 69 உறவுகளின் நினைவும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அம்பாறை நகரில் 1990 ஜுன் 12 ஆம் திகதி பட்டப்பகலில் 69 தமிழர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காரைதீவு விபுலானந்த அகதி முகாமில் ஐந்து வருடங்கள் வாழ்ந்த எஞ்சியவர்கள் 1995 இல் புதிய வளத்தாப்பிட்டியில் மீள்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.