அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தால், போர் புவியியல் ரீதியாக மேலும் விரிவடையும் என்று ஈரான் இராணுவம் இன்று (26) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வொஷிங்டன் பயணத்திற்கு முன்னதாக ஈரான் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஈரான் அரசு செய்தியாளர்களிடம் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா கருத்து தெரவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் மீண்டும் ஒருமுறை சியோனிஸ்டுகளின் வஞ்சகத்திற்குப் பலியானாலோ, அல்லது அவர்களுடன் இணைந்து செயல்பட்டு, குறிப்பாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் போரைத் தொடர வலியுறுத்தினாலோ, புவியியல் ரீதியாகப் போர் மேலும் விரிவடையும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின் ஜிசான் மற்றும் யான்பு பகுதிகளில் உள்ள 'சவூதி அராம்கோ' எண்ணெய் வசதிகளைக் குறிவைத்து நேற்று (25) தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர்.
இத்தகவலை ஹூதி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரே உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் போரின் தீவிரத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment