ஜெர்மனி பேரணியில் கார் விபத்து- ஒருவர் உயிரிழப்பு



 


ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள மத்திய 'டைகர் கார்டன் பார்க்' பகுதியில் நடைபெற்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.


நேற்று (25) இரவு சுமார் 10 மணியளவில், நூற்றுக்கணக்கான தன்பாலின ஈர்ப்பாளர்கள் பங்கேற்ற பேரணி வீதியில் அமைதியாக சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கூட்டத்திற்குள் புகுந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றுள்ளது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், மற்றும் மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்பு வாகனங்கள் மூலம் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்து, இச்சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.