நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் சீரற்ற காலநிலை ஓரளவு சீரடைந்திருந்தாலும், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் தொடர்ந்தும் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் நிலவுவதால், சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளுக்கான கடற்றொழில் தடை மறு அறிவித்தல் வரை தொடரும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படாது.
கடந்த சில நாட்களாக வானிலை எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலுக்குச் சென்ற மன்னார், கற்பிட்டி, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் உயிரிழந்தமை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பணிப்பாளர் நாயகம், உத்தியோகபூர்வ வானிலை எச்சரிக்கைகளை கட்டாயம் பின்பற்றுமாறும், கடலுக்குச் செல்லும் அனைவரும் உயிர்காப்பு அங்கிகளை அணியுமாறும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் இதுவரை 2 மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 15 கொள்கலன்கள் கடல் நீரோட்டத்தால் கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தெற்குக் கடற்பரப்பை நோக்கி மிதந்து செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் படகுகள் மோதினால் பாரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தெற்குக் கடற்பரப்பில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிக் கலன்கள் உள்ளிட்ட அனைத்து மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான கொள்கலன்களை காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்தின் வானொலி நிலையங்களுக்கு தகவல் வழங்குமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


Post a Comment
Post a Comment