கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு




 கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு; சாதனை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எஸ். கீர்த்திகா 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் என். தருகா 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் பே. திலகராஜா மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (25) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் பாடசாலையிலிருந்து வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். சாகாம வீதி, மணிக்கூட்டுக் கோபுரம், அம்பாறை வீதி, அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் மற்றும் இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை வீதி ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக வீதியை அடைந்து, பின்னர் மீண்டும் சாகாம வீதி வழியாக கோளாவில் அறுத்தநாக்கொட்டிஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக பேண்ட் வாத்தியங்களுடன் மாணவர்கள் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
மாணவர்களின் இந்தச் சாதனைக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், பிரதி அதிபர், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பழைய மாணவர் சங்க செயலாளர் இ. சுவர்ணராஜ், சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்தச் சாதனையானது கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதுடன், தேசிய மட்டத்தில் பாடசாலையின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.