கல்முனை கடற்கரை பள்ளிவாசல் 205வது கொடியேற்று விழா: தற்காலிக கடைகளுக்கான ஏலம்



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபின் 205வது வருட கொடியேற்று விழாவும் 470வது வருட மணாகிப் நிகழ்வும் எதிர்வரும் 2026 நவம்பர் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இவ்விழாவை முன்னிட்டு, வியாபார நடவடிக்கைகளுக்காக அமைக்கப்படவுள்ள தற்காலிக கடைகளுக்கான ஏல நிகழ்வு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஒக்டோபர் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை இனிப்பு மற்றும் புல்தோஷ் கடைகளுக்கான ஏலம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து, ஒக்டோபர் 31ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் நவம்பர் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் ஏனைய கடைகளுக்கான ஏலங்கள் நடைபெறவுள்ளன.

ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் நேரடியாக வருகை தந்து ஏலத்தில் பங்கேற்று கடைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கடைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், கடைகளுக்கான மொத்த வாடகையையும் முழுமையாகச் செலுத்த வேண்டும். அத்துடன், ஏலத்தொகையைச் செலுத்தி வாடகை ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்த பின்னரே கடைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்க்கத்திற்கு முரணான வியாபார நடவடிக்கைகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் கடைகளைப் பெற்று முறைகேடாக நடந்துகொண்டவர்களுக்கு இம்முறை கடைகள் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளுக்கான இடம் வழங்கப்படமாட்டாது எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏல நிகழ்வு மற்றும் கடைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0775150860 அல்லது 0772912122 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபை வெளியிட்டுள்ளது.