சாய்ந்தமருது மியாண்டாட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது மியாண்டாட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாய்ந்தமருது கோட்ட மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மியாண்டாட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யு.எல். பஹீம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக் உட்பட கல்வித்துறை அதிகாரிகள், அதிபர்கள், சமூகப் பிரமுகர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தோர் மற்றும் கழகத்தின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேசியக் கொடியேற்றம், கிராஅத் ஓதுதல், வரவேற்புரை, அதிதிகளின் உரைகள், மாணவர்களைக் கௌரவித்தல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த திறமை விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்விச் சாதனைகள் பாராட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்வி இலக்குகளை அடைய வேண்டும் என அதிதிகள் தமது உரைகளில் ஊக்கமளித்தனர்.
மேலும், இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் மியாண்டாட் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு அகடமியை அங்குரார்ப்பணம் செய்வதற்கான நிகழ்வும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தது. கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் மாணவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரிடையே பாராட்டைப் பெற்றது.


Post a Comment
Post a Comment