பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல், பொதி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நபர்களும் நடைமுறையிலுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிள் விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் தரம் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உணவக உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சந்தைப்படுத்தப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் முழுமையான சுகாதார அம்சங்களுடன் தரமான முறையில் பொதி செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நடைமுறையிலுள்ள லேபிள் விதிமுறைகளுக்கு அமைவாக உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி உள்ளிட்ட அத்தியாவசிய விபரங்கள் ஒவ்வொரு உணவுப் பொதியிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
குறிப்பாக தயிர், இனிப்பு வகைகள் போன்ற விரைவில் பழுதடையக்கூடிய உணவுப் பொருட்களைத் தயாரித்தல், பொதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றின் போது தீவிர சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், உணவுகளைக் கையாளும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழைத் (Medical Certificate) தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதனை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் மேலதிக விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் அல்லது தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தை நேரடியாக அணுகிப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சட்டரீதியான தேவைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது அலட்சியமாகச் செயற்படும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள உணவுச் சட்ட விதிகளுக்கு அமைவாகக் கடுமையான நீதிமன்றச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அதிகாரி பணிமனை எச்சரித்துள்ளது.


Post a Comment
Post a Comment