மயிலத்தமடுவில் துயரம் - மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் மீது துப்பாக்கிச் சூடு!




 மட்டக்களப்பு மயிலத்தமடுவில் துயரம் - மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் மீது துப்பாக்கிச் சூடு!


மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வு எட்டப்படாத நிலையில், அப்பகுதியில் மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் மிகுந்த கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.


​வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பண்ணையாளர்கள்.


​மயிலத்தமடு பகுதியில் காலகாலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள், பல்வேறு சிரமங்களுக்கும் தொடர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்தான் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தி வருகின்றனர்.


​இந்நிலையில், நேற்று (14.10.2026) ஆம் திகதி இரவு மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள், இன்று (15.10.2026) ஆம் திகதி காலை கடுமையான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பண்ணைகளுக்குத் திரும்பியுள்ளன.


​ஆக்கிரமிப்பாளர்களால் தொடரும் அச்சுறுத்தல்.


​இது குறித்துப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கையில்,

​"வெளிய மாவட்டங்களிலிருந்து வந்து, எமது மேய்ச்சல்தரைப் பகுதியை அத்துமீறிச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருபவர்கள்தான் இவ்வாறு துப்பாக்கிகளைக் கொண்டு எமது வாய்பேச முடியாத பசுக்களைத் தினம் தினம் சுட்டுக் கொன்று வருகின்றனர்"

​எனத் தெரிவித்துள்ளனர்.


​தற்போதைய சூழலில் தாங்கள் வாழ்வதா அல்லது தமது பிரதான வாழ்வாதாரமான கால்நடை வளர்ப்பை மேற்கொள்வதா என்று அறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.


​மனித உரிமைக் குழுக்களின் விஜயம் மற்றும் தொடரும் அவலம்.


​கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் இப்பகுதிக்கு நேரடி விஜயம் செய்து, நிலவரங்களை நேரில் பார்வையிட்டுப் பண்ணையாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


​எனினும், இவ்வாறான உயர் மட்டப் பார்வைகளும் விஜயங்களும் இடம்பெற்ற போதிலும், பண்ணையாளர்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் இன்னும் குறைந்தபாடில்லை என்பது இப்பகுதியில் தொடரும் மனித உரிமை மீறல்களையும் வாழ்வாதாரச் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


​இப்பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு வழங்குமாறு உரிய தரப்பினரிடம் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.