இறக்காமம் மக்களின் நீதிமன்றப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பியினால் வினவப்பட்ட கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி
இறக்காமம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் நீதிமன்றம் சார்ந்த மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அப்பிரதேச நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைக்க அல்லது அப்பிரதேசத்துக்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைக்கத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை (21) பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையின்போது நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதன்போது சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி,
"இறக்காமம் பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் மக்களே வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் சிங்கள மொழிப் பயன்பாட்டிலுள்ள அம்பாறை நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பிரதேச மக்கள் பாரிய மொழி ரீதியான அசௌகரியங்களை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இறக்காமம் நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைப்பதற்கான அல்லது இறக்காமம் பிரதேசத்துக்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு ஏற்கனவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் , கடந்த 2025 ஜூன் 17ஆம் திகதி நடைபெற்ற நீதியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களின் இந்நீண்டகாலப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?" எனத் தொடர் கேள்விகளை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீதிமன்றங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதியான அசௌகரியங்களைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
"நாட்டில் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். எனினும் சில சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்பாளர்களின் தகுதி, பணியாளர் பற்றாக்குறை மற்றும் நிர்வாகம் சார்ந்த விடயங்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் எவ்விதத் தடையுமின்றிச் சமர்ப்பிக்க முடியும்.
புதிய நீதிமன்றமொன்றை அமைப்பது அல்லது ஏற்கனவே உள்ள நீதிமன்றமொன்றுடன் இணைப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பணியாளர் தேவை, வழக்குகளின் தன்மை, அவற்றைத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தற்போது நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற சேவைகளில் மொழி ரீதியாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றைத் தனித்தனியாகத் தமக்கு அறிவிக்குமாறும் அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறிய அமைச்சர் இலங்கையில் எந்தவொரு பொதுமகனும் மொழி ரீதியான அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்க முடியாது" எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சபையில் குறுக்கிட்ட எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி., "இறக்காமம் மக்களின் நீதிமன்றத் தேவைகள் தொடர்பாக நீதி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்திருந்தார். எனினும் ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை" எனச் சுட்டிக்காட்டினார்.
எனவே, நீண்டகாலமாகச் சிரமங்களை எதிர்கொண்டு வரும் இறக்காமம் பிரதேச மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்விடயத்தில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சரிடம் அவர் விசேட வேண்டுகோள் விடுத்தார்.


Post a Comment
Post a Comment