மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல்.முருகன் அறிவிப்பு



 




மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.


அந்த கடிதத்தில், "பிரதமர் அவர்களே, கட்சியிடமிருந்தும் உங்கள் தலைமையிடமிருந்தும் நான் பெற்ற அனைத்தும் எனது பொறுப்புணர்வை மேலும் ஆழமாக்கியுள்ளன. இந்தியா, தமிழ்நாடு மற்றும் பாஜக மீதான உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, என்னைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திய அந்தப் பணிக்காக இனி நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.


எனவே, பணிவுடனும் நன்றியுணர்வுடனும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்: தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்துவதில் முழுநேரமாக ஈடுபட ஏதுவாக, இணையமைச்சர் (Minister of State) பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறும், மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவியிலிருந்து விலக அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்." எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


"உங்கள் சமீபத்திய வருகையின்போது நான் கண்ட அன்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை, தமிழ்நாட்டில் நாம் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற என் உறுதியை வலுப்படுத்தியுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவதிலும், உங்கள் தலைமையின் கீழ் மீண்டும் ஒரு ஆட்சியை அமைப்பதிலும் - இம்முறை தமிழ்நாட்டிலிருந்து பெருமளவிலான இடங்களை வென்று அளிப்பதன் மூலம் - எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் செலவிட விரும்புகிறேன்." என்றும் அவர் கூறியுள்ளார்.


மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் திடீர் ராஜிநாமா - என்ன காரணம்? 

பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்க என் இல்லத்திற்கு மூன்று முறை நீங்கள் வருகை தந்த அந்தச் சிறப்பான செயலை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.


எல்.முருகனின் பின்னணி

1977ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்த எல். முருகன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.


ஆர்.எஸ்.எஸில் இணைந்து பணியாற்றி வந்த எல். முருகன், அக்கட்சியின் பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்ட முருகன் 1730 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.


2018ஆம் ஆண்டுவாக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றிவந்தார். ஆணையத்தில் ஓராண்டு பதவிக்காலம் இருந்தபோதும், மாநில பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.



மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் திடீர் ராஜிநாமா - என்ன காரணம்? 

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.


2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 20 இடங்களைப் பெற்று, அதில் நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன் தோல்வியடைந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடம்பெற்றது கவனிக்க வைத்தது.


இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள எல்.முருகன், பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்து வந்தார்.


இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.