-ஹுஸைன்-
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மறுசீரமைப்பின்போது சிறுபான்மை இனங்கள் இணைந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிறுபான்மைச் சமூகங்கள் இந்த நாட்டில் தமது தனித்துவத்தைத் தற்காத்துக் கொள்ள முடியும் என என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் புதன்கிழமை சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும்; மார்க்கக் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா கூறியதாவது,
எனது அரசியல் பயணத்தில் நான் ஒருபோதும் இன, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளைக் கவனத்தில் எடுத்ததில்லை.
போட்டி அரசியலுக்காக சிந்தித்து எனது ஒரு நாழிகைப் பொழுதைக் கூட வீணாக்கியது கிடையாது. இன, சமூக ஒற்றுமையையும், அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டே எனது அரசியல் பாதை நகர்ந்திருக்கிறது.
தற்போது நாட்டில் புதிய அரசியல் மறுசீரமைப்பு மாற்றம் கொண்டு வருவது பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
எனவே அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் மலையகத்தவர்களும் இணைந்து கொண்டு தங்களுக்குள் ஒரு ஏகோபித்த முடிவை எட்ட வேண்டும்.
இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இன்று புதன்கிழமை இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் சந்திப்பு நடத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் இது சிறுபான்மை இனங்களுக்கு நல்ல சகுனம் என்றே நான் கருதுகின்றேன்.
புதிய அரசியல் மறுசீரமைப்பின்போது தேர்தல் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை பெரும்பான்மை சமூக அரசியல் கட்சிகள் கொண்டிருக்கின்றன. அப்படி தேர்தல் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அதனால் சிறுபான்மைச் சமூகங்களே பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக முஸ்லிம்களும் மலையக சிறுபான்மையினரும் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்வார்கள். எனவே இந்த விடயத்தில் சிறுபான்மைச் சமூகங்களிடத்தில் இதய சுத்தியுடனான இணக்கப்பாடு தேவை' என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் உட்பட அதிகாரிகள் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
