நாமலின் நடனக்குழுவுக்கு பணத்தை பரிமாற்றிய நாலக கொடஹேவ தலைமறைவு




கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவவை கைதுசெய்ய நேற்று பொலிஸார் சென்ற போதும் அவர் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் சுமார் 50 லட்சம் ரூபா பணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் “தாருன்ய ஹெட்ட” நிதியத்துக்கு நேரடியாக பரிமாற்றம் செய்ததாக நாலகவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பணம் நாமல் ராஜபக்சவின் “கார்ல்டன் சுப்பர் செவன்” ரக்பி சுற்றுப்போட்டிகளுக்கான ஹிப் ஹொப் நடனக்குழுவுக்கான கொடுப்பனவின் நிமித்தம் அமரிக்காவில் உள்ள கணக்கு ஒன்றுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அவர் நேற்று வாக்குமூலம் அளிக்க வருமாறு கோரப்பட்டிருந்தார்.
எனினும் வராமை காரணமாக நிதிமோசடிகள் தொடர்பான பொலிஸார் நாலகவை கைதுசெய்ய அவரின் வீட்டுக்கு சென்றனர்.
தமது கணவர் வீட்டில் இல்லையென்றும் இரவுவரை அவர் வீட்டுக்கு வரமாட்டார் என்றும் நாலகவின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாலக இன்று நிதிமோசடி எதிர்ப்பு பொலிஸ் பிரிவுக்கு சமுகம் தராவிட்டால் தாம் நீதிமன்ற பிடியாணை உத்தரவை பெறவேண்டியிருக்கும் என்றும் அவரின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாலக, அடுத்த வாரம் விசாரணைக்கு சமுகம் தருவார் என்று அவரின் சட்டத்தரணிகள் நிதிமோசடி பொலிஸ் பிரிவிடம் அறிவித்துள்ளனர்.