கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் இன்று 02.00 மணிக்குப் பின்னர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விமான நிலைய தலைவர், உப தலைவர், நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் பெற்றுக் கொடுக்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்ததாக, தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வருட இறுதியில் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவான 45,000 ரூபாவை இன்றே வழங்க வேண்டும், சேவையாளர்களுக்கான போக்குவரத்து வசதிகள் 50 கிலோ மீற்றருக்கு மட்டுப்படுத்தப்பட்டமையை இரத்துச் செய்ய வேண்டும், கட்டுநாயக்க, இரத்மலானை, மத்தல ஆகியவற்றில் முன்னர் மேற்கொள்ளப்பட்டது போல போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், காப்புறுதித் திட்டம் இப்போது உள்ள முறையிலேயே தொடர வேண்டும், இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளாதிருக்க வேண்டும், உள்ளிட்ட, ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை சுதந்திர சேவையாளர்கள் சங்கம், தேசிய சேவையாளர்கள் சங்கம் மற்றும் உள்ளக சேவையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அவர்களது கோரிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணிக்குள் பெற்றுக்கொடுக்கப்படாவிடில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் குறிப்பிட்டனர்.
எனினும், விமான நிலைய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, குறித்த காலப் பகுதியை பிற்பகல் 02.00 மணிவரை நீடிக்க தொழிற்சங்க பிரதிநிதிகள் இணங்கினர்.
எதுஎவ்வாறு இருப்பினும் தமது அனைத்துக் கோரிக்கைகளையும் பெற்றுக் கொடுக்க நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இதனால் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
எனினும் தமது கோரிக்கைகளுள் ஒன்றான 45,000 ரூபா மேலதிகக் கொடுப்பனவு 42,000 மாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுதந்திர சேவையாளர்கள் சங்க விமான நிலைய கிளையின் தலைவர் எம்.முகந்திரம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏனைய அனைத்துக் கோரிக்கைகளையும் அவ் வண்ணமே நிறைவேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தலைவர் மீதுள்ள நம்பிக்கையில் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுள்ளதாகவும், அவர் தமது நம்பிக்கையை காக்கத் தவறின் மீண்டும் பேச்சுவார்த்தை இன்றி வேலை நிறுதத்தை மேற்கொள்ள தயங்க மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

