மலையகத் தொழிலாளர் சம்பள விவகாரம்: தொடரும் இழுபறி





தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது
இலங்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் இடையில் தொடர்ந்தும் இழுபறி நிலையே நீடிக்கின்றது.
தற்போது நாளொன்றுக்கு 687 ரூபா சம்பளமாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை 1000ரூபா ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜுலை மாதம் 6ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை தொழில் அமைச்சில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவினால் கூட்டப்பட்ட கூட்டமும் எவ்வித முடிவுகளும் இன்றி கூடி கலைந்தது.
நிரந்தர தீர்வொன்றை காணும்வரை நாளொன்றுக்கு 100 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக அமைச்சரினால் யோசனையொன்று கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
'தோட்டங்களை அரசிடம் கையளிக்கலாம்'
ஆனால், தாங்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதாக வழமையான காரணங்களைக் கூறி தோட்ட நிறுவனங்கள் அதனை ஏற்க மறுத்து விட்டதாக பெருந் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளரான எஸ். இராமநாதன் கூறினார்.
தோட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்ட சந்தர்ப்பத்தில், நஷ்டம் என்றால் தோட்டங்களை அரசிடம் கையளிக்கலாம் என்று அதனை நிராகரிக்கும் வகையில் அமைச்சர் பதிலளித்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
நாளை சனிக்கிழமை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக பிரதமருக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் நல்லதொரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது.
தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட் சம்பள உயர்வு கோரிக்கை காரணமாகவே புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் இரு தரப்புக்குமிடையில் 9 மாதங்களாக இழுபறி நிலை நீடித்து வருகின்றது.