தெமட்டகொடை பகுதியில் 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததை அடுத்து கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டதோடு , அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 12 நாட்களுக்கு முன்னதாக குறித்த டிபென்டர் அவரது பெயரில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, கடத்தல் இடம்பெற்றமைக்கான காரணம், கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர், கடத்தியதாக கூறப்படுபவர்களில் ஒருவரின் மனையியுடன் தவறான உறவு வைத்திருந்தமையே என அறியக் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

