தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் நீதிபதி சரத் டி ஆப்று
இலங்கையில் உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்று, தனக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணை ஒன்றை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை இடைநிறுத்துமாறு கோரி மனுத் தாக்கல் செய்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுதான் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லக்ஷ்மன் டயஸ் தெரிவித்தார்.
வீட்டுப் பணிப்பெண் ஒருவரை துப்பாக்கியினால் தாக்கி பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டி நீதிபதி ஆப்றுவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நியாயமான விசாரணை ஒன்றை நடத்தாமல் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்வதற்கு எடுத்தத் திர்மானம் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரியே நீதிபதி ஆப்று இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சட்டமா அதிபரின் தீர்மானத்தின் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள தலைமை நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளின் குழு, சட்டமா அதிபர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தது.
சட்டமா அதிபர் தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று கூறிய நீதிபதிகள், நீதிபதி ஆப்றுவின் மனுவை விசாரணையின்றி தள்ளுப்படி செய்வதாக அறிவித்தனர்.


