20 ஆண்டுகள் தடுப்புக் காவலில் இருந்தவர்களுக்கு 2-ஆண்டு சிறை



இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான தெஹிவளையில் 1996-ம் ஆண்டு நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
சின்னப்பு செல்வராஜா, சுப்பையா ஸ்ரீதரன் ஆகிய இருவருக்கும் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தங்களின் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இருவரும் 20 ஆண்டுகளை வரை தடுப்புக்காவலில் கழித்துள்ளதை கவனத்தில் எடுத்துள்ளதாக கூறினார்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களாக இருந்தவர்களுக்கு நீதிமன்றம் ஏற்கனவே தண்டனையை வழங்கிவிட்டதால், இந்த இரண்டு பேருக்கும் இரண்டாண்டு கடூழிய சிறைத் தண்டனையை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
சிறைத் தண்டனை முடிந்தபின்னர், இருவரும் ஓராண்டு கால புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
1996- ம் ஆண்டு தெஹிவளை ரயில் குண்டுவெடிப்பில் 60 க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் கைதான மூன்று பிரதான சந்தேகநபர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் பத்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.