அக்கரைப்பற்று நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு




அக்கரைப்பற்று நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணி
(அக்கரைப்பற்று நிருபர்);
அக்கரைப்பற்று  தேசிய நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தை பிரித்து கல்முனைக்குக் கொண்டு செல்வதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று   1.30 மணியளவில் (18) இடம் பெற்றது.

அக்கரைப்பற்று பள்ளிவாயல்கள் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பேரணி ஜும்ஆத் தொழுகையின் பின் அக்கரைப்பற்று ஜும்ஆ பட்டினப்பள்ளி வாயல் முன் பிரதான வீதியிலிருந்து ஆரம்பித்து அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில்  அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வரை சென்று முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஸபீஸ் இனால் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் அவர்களிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
                
பேரணியில் சென்றோர் 'நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தைப் பிரிக்காதே',  'பிராந்தியக் காரியாலயத்தை துண்டாடாதே', ' ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே அக்கரைப்பற்று மக்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள்.
 ஜனாதிபதி அவர்களே அக்கரைப்பற்று  பிராந்தியக் காரியாலயம் துண்டாடுவதைத் தடுத்து நிறுத்துங்கள்' 'அமைச்சர் றவூப் ஹக்கீமே ஒழிந்து போ' ஏன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் வாசகங்களை கோஷித்தபடி பேரணியில் சென்றனர்.

இப் பேரணியில் பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள், கழகங்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.