சபாநாயகர் ஒப்பமிட்டால் உயர் நீதிமன்றில் வழக்கு



தவறாக நிறைவேற்றப்பட்டுள்ள அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணையில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் சபாநாயகர் ஒப்பமிட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திக்க நேரிடும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படியல்லாது தவறாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரேரணையொன்றுக்கு கையொப்பமிடுவது சபாநாயகருக்கு பொருத்தமற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பிரேரணை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தி அதில் கையொப்பம் இடுவதா? இல்லையா? என சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தல் விடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியுள்ளார்.