திருடப்பட்ட முச்சக்கரவண்டி மின் கால்வாயில் முக்குளித்தது




வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவூன்ஜீன் தோட்டத்திலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றினை திருடி கொண்டு சென்றுகொண்டிருந்த வேளையில் இவ் முச்சக்கரவண்டியினை நீர் வழி மின்சார கால்வாயில் இட்டுச்சென்ற இருவரை வட்டவளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 19.05.2016 அன்று அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்கள் 19.05.2016 அன்று அதிகாலை ஒரு மணியளவில் முச்சக்கரவண்டியை திருடி இரத்தினபுரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த வேளையில், முச்சக்கரவண்டி சாவி இன்றி இயக்க முடியாது போனதால் பின்னர் தள்ளிக்கொண்டு போகும் போது முச்சக்கரவண்டி திடீரென திரும்பி மின்சார உற்பத்தி நீர் வழி கால்வாயில் வீழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும் முச்சக்கரவண்டியை இவர்களுக்கு கொண்டு செல்ல முடியாது போனதால் இதனை பாதாளத்தில் தள்ளிவிட்டு இவர்கள் தலைமறைவாகியிருக்கவே இவர்கள் முயற்சித்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இவ் முச்சக்கரவண்டி மின்சார உற்பத்தி கால்வாய்ல் வீழ்ந்ததனால் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று இயந்திரங்கள் 19.05.2016 அன்று அதிகாலை ஒரு மணிமுதல்  நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் பல லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகயும் மின்சார உற்பத்தி நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்படி சந்தேக நபர்கள் இரத்தினபுரி ஸ்ரீபாகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.