குப்பைத் தொல்லை



வௌ்ளம் வடிந்தோடியுள்ள நிலையில் களனி ஆற்றை அண்மித்த பகுதிகளில் குப்பை அகற்றப்படாமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கொலன்னாவ, வெல்லம்பிட்டி, ஹெட்டியாவத்தை, அங்கொட, ஐ.டீ.எச் மற்றும் பெரன்டியாவத்த ஆகிய பகுதிகளின் வீதிகளில் இருபகுதிகளிலும் அதிகளவான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
எனினும், வழமையாக வீடுகளில் இருந்து அகற்றப்படுகின்ற குப்பையை விட இதில் வேறு பல பொருட்களையும் காணக்கூடியதாக இருந்தது.
ஏழு அடியையும் தாண்டிய வௌ்ளம் சில வீடுகளில் எதையும் விட்டுவைக்கவில்லை.
இலத்திரனியல் உபகரணங்கள், மரத்தளபாடங்கள் உட்பட ஆடம்பரப்பொருட்கள் பலவும் குப்பையில் எறியப்பட்டுள்ளன.
மக்களிடையே இனம்புரியாத அச்சம் காணப்படுகிறது.
குவிந்து கிடக்கும் குப்பை காரணமாக சிறிதளவு மழை பெய்தாலும் தமது குடியிருப்புக்கள் மீண்டும் நீரில் மூழ்கும் என மக்கள் அச்சம் வெளியிட்டனர்.
இந்நிலையில், தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக இடைக்கிடையே மழை பெய்து வருகின்றது.
நேற்றிரவு பெய்த மழை காரணமாக குறித்த பகுதியில் இரண்டு அடிக்கு வெள்ளம் தேங்கியுள்ளது.
நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக குப்பைகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.