புதிய சாம்பியனாக மகுடம் சூடப்போவது யார்?




பெங்களூரு: 
இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 9வது சீசனில் புதிய சாம்பியனாக மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான  பைனலில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி  பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மாதம் 9ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இந்த தொடரில்  மொத்தம் 8 அணிகள் களமிறங்கின. சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால்  ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிகள் புதிதாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதின. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத்,  பெங்களூர், ஐதராபாத், கொல்கதா அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. 

நடப்பு சாம்பியன் மும்பை, டெல்லி, புனே, பஞ்சாப் அணிகள் பரிதாபமாக வெளியேறின. பிளே ஆப் சுற்றில், முதலில் நடந்த குவாலிபயர் 1 போட்டியில்  கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி அணி, குஜராத் லயன்சை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில்  வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 22 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வெளியேற்றியது. இதைத் தொடர்ந்து, டெல்லியில்  நேற்று முன்தினம் நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் குஜராத் லயன்சை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ், கேப்டன் வார்னரின் அபாரமான ஆட்டத்தால்  வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் 9வது சீசனில் புதிய சாம்பியனாக உருவெடுத்து கோப்பையை முதல் முறையாக  முத்தமிடப் போகும் அணி எது என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் சன்ரைசர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் கைகலக்கின்றன. சன்ரைசர்ஸ் முதல்  முறையாகவும், பெங்களூர் அணி 3வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. 

2009 பைனலில் டெக்கான் சார்ஜர்சிடமும், 2011ல் சூப்பர் கிங்சிடமும் தோற்று சாம்பியனாகும் வாய்ப்பை இழந்த ஆர்சிபி அணி, இம்முறை கோஹ்லி  தலைமையில் புதிய உற்சாகத்துடன் விளையாடி வருகிறது. புள்ளிப் பட்டியலில் பின்தங்கி இக்கட்டான நிலையில் இருந்த அந்த அணி, தொடர்ச்சியாக 4  லீக் ஆட்டங்களில் வென்று 2வது இடம் பிடித்ததுடன் குவாலிபயர் 1 ஆட்டத்திலும் அபாரமாக வென்று பைனலுக்குள் நுழைந்தது. கோஹ்லி, டி வில்லியர்ஸ்,  கிறிஸ் கேல், ஷேன் வாட்சன், லோகேஷ் ராகுல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக  இருந்து வருகிறது. கோஹ்லி 15 போட்டியில் 4 சதம், 6 அரை சதம் உள்பட 919 ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தி இருக்கிறார். ஒரு ஐபிஎல்  சீசனில் 1000 ரன் குவித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற அவருக்கு இன்னும் 81 ரன் மட்டுமே தேவை. கோஹ்லிக்கு ஈடு கொடுக்கும் வகையில்  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டி வில்லியர்ஸ் 682 ரன் குவித்துள்ளார் (1 சதம், 6 அரை சதம்). 

பெங்களூர் அணி பேட்டிங் வரிசையில் மிரட்டும் நிலையில், சன்ரைசர்சின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.  பேட்டிங்கிலும் கேப்டன் வார்னர் 779 ரன் (8 அரை சதம்), தவான் 473 ரன் (4 அரை சதம்) குவித்து சிறப்பாக பங்களித்துள்ளனர். யுவராஜும் கணிசமாக ரன்  குவித்து நம்பிக்கை அளிக்கிறார். புவனேஷ்வர் குமார் 23 விக்கெட் கைப்பற்றி ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். ஆர்சிபி அணியின் சாஹல்,  வாட்சன் தலா 20 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர். நெஹ்ரா காயம் காரணமாக விலகியதும், முஸ்டாபிசுர் ரகுமான் முழு உடல்தகுதியுடன்  இல்லாததும் சன்ரைசர்சுக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது.

புவனேஷ்வருடன் டிரென்ட் போல்ட், பரிந்தர், பிபுல், ஹென்ரிக்ஸ், யுவராஜ், கட்டிங் ஆகியோரும் துல்லியமாகப் பந்துவீசினால், ஆர்சிபி அணிக்கு நெருக்கடி  கொடுக்கலாம். சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஒருமித்த ஆதரவும் பெங்களூர் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இரு  அணிகளுமே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குவதால், கடைசி பந்து வரை ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 

டேவிட் வார்னர் (கேப்டன்), ஷிகர் தவான், இயான் மார்கன், கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங், நமன் ஓஜா, மோய்சஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, ஆசிஷ்  ரெட்டி, ரிக்கி புயி, பிபுல் ஷர்மா, டிரென்ட் போல்ட், பென் கட்டிங், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், அபிமன்யு மிதுன், முஸ்டாபிசுர் ரகுமான், விஜய்  ஷங்கர், கரண் ஷர்மா, பரிந்தர் ஸ்ரண், திருமலசெட்டி சுமன், ஆதித்யா தாரே. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 

விராத் கோஹ்லி (கேப்டன்), கிறிஸ் கேல், லோகேஷ் ராகுல், டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், வருண் ஆரோன், அபு நேச்சிம், நாத் அரவிந்த், ஸ்டூவர்ட்  பின்னி, யஜுவேந்திர சாஜல், பிரவீன் துபே, டிராவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், கிறிஸ் ஜோர்டான், அக்‌ஷய் கர்னேவார், சர்பராஸ் கான்,  விக்ரம்ஜீத் மாலிக், மன்தீப் சிங், பர்வேஸ் ரசூல், ஹர்ஷல் பட்டேல், கேன் ரிச்சர்ட்சன், சச்சின் பேபி, தப்ரெய்ஸ் ஷம்சி, விகாஸ் டோகாஸ், டேவிட் வைஸ்