தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை காலை 7 மணிக்குத் துவங்கித் தீவிரமாக தற்போது நடந்துவருகிறது.
இன்று காலை முதலே வாக்காளர்கள் வாக்குசாவடிகளில் வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடந்துவருகிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குகளைப் பதிவுசெய்ய 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஓசூர், திண்டுக்கல் போன்ற சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு துவங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
வாக்குப்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வாக்களித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறுமென்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டோடு சேர்ந்து கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

