காணிப் பிரச்சனை: விளக்கமளிக்க ராணுவத்துக்கு உத்தரவு



யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ் குடா நாட்டில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட முன்று தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த புகார் சம்பந்தமாக வரும் 26-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தலைமை நிதிபதி ஸ்ரீ பவன் உட்பட மூவர் அடங்கிய நிதிபதிகளின் குழு, இலங்கை ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட தனியார் காணிகளை இலங்கை ராணுவத்தினர் 2012-ஆம் ஆண்டு பலவந்தமாக கையகப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
காணிகளை கையகப் படுத்துபடுத்தும் போது காணி தொடர்பான சட்ட விதிமுறைகளை அணுக ராணுவத்தினர் தவறியுள்ளதாக குற்றம் சாட்டிய வழக்கறிஞர் மனுதாரர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.
எனவே, சட்ட விரோதமாக கையகப் படுத்தப் பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசு தரப்பின் வழக்கறிஞர் கருத்துக்களை தெரிவித்த போது சம்பந்தப்பட்ட காணிகளை யாழ் பிரதேச செயலாளர் சட்ட ரீதியாக கையகப்படுத்தியுள்ளதாக கூறினார்.
இந்த தகவலை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறிய மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்ட ரீதியாக கையகப்படுத்தப்பட்டிருந்தால் மனுதாரர்களுக்கு நஷ்ட ஈடுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியது ஏன் என்று கேள்வியொன்றை எழுப்பினார்.
இந்த புகார் குறித்து அரச தரப்பின் விளக்கங்களை கோருவது அவசியமென்று கூறிய தலைமை நிதிபதி, வழக்கின் விசாரணைகளை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
அன்றைய தினம் சம்பந்தப் பட்ட காணிகள் கையகப் படுத்தப் பட்ட விதம் குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் இலங்கை ராணுவத்தினருக்கு உத்தரவிட்டது.