தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தில் புகுந்து ‘சின்ஹ லே’ அமைப்பு அட்டகாசம்




முன்னாள் போராளிகளின் திடீர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் ‘சின்ஹ லே’ அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. இதன் பின்னர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் உள்ள அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்று மனுக் கையளிக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.
அதற்கமைய அவர்கள் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்றபோது திடீரென, பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அங்கு வந்து பெரும் சத்தம் எழுப்பினர். போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டினர். அவர்களில் சிலர் சின்ஹ லே வாசகம் அடங்கிய ரீசேர்ட்டுக்களையும் அணிந்திருந்தனர்.
பொலிஸாருக்கு முன்பாகவே போராட்டக்காரர்களுடன் வந்திறங்கிய குழுவினர் முரண்பட்டதுடன் போராட்டக்காரர்களை தாக்கவும் முயற்சி செய்தனர். (ச)
எனினும் மோதல் ஏற்படாமல் பொலிஸார் பார்த்துக் கொண்டனர். இறுதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் அமீரிடம், மனுவை போராட்டக்காரர்கள் கையளித்தனர்.