பாராளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ரவுடிகள் போன்று பாராளுமன்றத்திற்குள் நடந்து கொண்டார்கள்.பிரசன்ன ரணவீர ஆளுங்கட்சிப்பக்கமாக படியேறி வந்து தாக்குவதற்கு முற்பட்ட வேளையில் நான் தடுத்து திருப்பித் தாக்க முயற்சித்தேன். என்னை அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தடுத்துவிட்டார். இல்லாவிட்டால் பிரசன்ன ரணவீரவின் முகம் அஷ்டகோணலாகியிருக்கும்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் சவால் விடுக்கின்றேன். பாராளுமன்றத்தின் கௌரவம் இவ்வாறானவர்களிடமிருந்து பாதுகாக்கப்படுமாயின் ஒருவாரம் அல்ல, ஆயுள் முழுமைக்கும் பாராளுமன்றத்திற்கே வராமல் இருக்கவும் நான் தயார் என்றும் பாலித தெவரப்பெரும தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

