G7 மாநாடு ஜப்பானில் ஆரம்பம்: ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு



G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று முற்பகல் ஜப்பானைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஜோகீ மூட்டோ, நகோயா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.
அதன் பின்னர் அந்நாட்டின் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
ஜனாதிபதி இன்று பிற்பகல் வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பின்னர் ஜப்பான் சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைவர் ஹிரோயூகி இஷிகே மற்றும் ஒனொமிசி டொக்எயார் நிறுவனத்தின் தலைவர் டகாஷி நகாபே ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு பொருளாதார பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புக் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, G7 அரச தலைவர்கள் மாநாடு இன்று ஜப்பானில் ஆரம்பமானது.
உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மரக்கன்றுகளை நாட்டி மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், ஜேர்மன், இத்தாலி, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கும் ஜி 7 மாநாட்டிற்கு இம்முறை ஜப்பான் தலைமை வகிக்கின்றது.
உலக சொத்துக்களில் 60 வீதமான சொத்துக்களுக்கு உடைமை கோரும் இந்த 7 நாடுகளும் உலக மொத்த உற்பத்திக்கு 46 வீத பங்களிப்பை வழங்குகின்றன.
G7 மாநாடு நாளை நிறைவடையவுள்ளது.